சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு அடைந்ததையொட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்று சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில், தமிழ்நாட்டில் கிராமப்புரங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை இருப்பதைப் போன்று நகர்ப்புறங்களில் மக்கள் அரசு பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, நேற்று (ஜூன் 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் என 500 மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 500 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மையம் செயல்படும்.
இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் இப்பகுதியில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம், மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள் மற்றும் தொற்றா நோய்களுக்கான சேவைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள் குறிப்பாக, குடிசை வாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் மருத்துவ வசதி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்பட்டு, அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சுகாதார சேவைகளை மக்கள் எவ்வித பொருட்செலவின்றி, அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே பெறுவதோடு அல்லாமல், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார தேவைகளுக்காக மக்கள் தேவையின்றி அணுகும் சூழ்நிலையையும் குறைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்
ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் நடைமுறையில் 'பள்ளிக்கல்வி இயக்குனர்' பதவி; முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி..!