சென்னை: தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சில நிறுவங்களின் ஆலைகளையும் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
அரசு நிகழ்வுகளில் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் காணப்படும் முதலமைச்சர், முதலீட்டாளர் மாநாட்டில் கோட் - சூட்டில் வந்தார். இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்கையில்தான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளதால், நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது.
இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கு வந்த உடன் முதலீடும் மழையாக பொழியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வந்திருக்கக் கூடிய சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் சமத்துவத்தைப் போற்றிய வள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும் பிறந்த மண்ணுக்கு வந்துள்ளீர்கள்.இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமின்றி, உங்கள் சகோதரனாக நான் உங்களை வரவேற்கிறேன்.
தொழில்துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் இருந்தே கடல் கடந்தும் வாணிபம் செய்தார்கள். அதனால்தான் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது.
இந்தியாவிற்கு பலவிதங்களில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம். 1920ஆம் ஆண்டு தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழில் அதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அதனால்தான் தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக உள்ளதால், திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள்” என்றார்.
இதையும் படிங்க: திருச்சி மத்திய மண்டலத்தில் 18% ஆகக் குறைந்த கொலை குற்றங்கள் - காவல்துறை தகவல்