இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமான, சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, 2013ஆம் ஆண்டு முதல் நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இனி நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்கா நிர்வாகக் குழு நிர்வாகி கே. அலாவுதீனிடம் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலர் க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முனைவர் பெ. துரைராசு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எஃப். அக்பர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க... நாகூர் தர்கா சொத்துகளை அபகரிக்க முயற்சி; தடுப்பவருக்கு போன் கால் மிரட்டல்!