இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
இந்தியா முழுவதும் கரோனா தொற்றைத் தடுப்பதற்காகத் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், சில தளர்வுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு நாளை (05-07-2020) வரை அமலில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, நாளை மறுநாள் (06.07.2020) முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9.00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருள்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.
- தேநீர்க் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- வணிக வளாகங்கள் (Malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), முன்னதாக அறிவித்திருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம்.
மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 19ஆம் தேதிக்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்கும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.