சென்னை: அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதிமுக தொண்டர்கள் பலரும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியும், நலத்திட்ட உதவிகளைச் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நவீன தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த அன்னையாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அம்மாவாகவும் இருந்து எங்களை ஆளாக்கிய ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அவர் மக்களுக்கு அளித்த நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கல்விக்கு கணினி
கழனிக்கு காவிரி
உலைக்கு அரிசி
உயிர்காக்க காப்பீடு
உயர்வுக்கு ஆலை
என அனைத்தும் தந்து
ஈடில்லா மாநிலமாய்
தமிழகத்தை உயர்த்திட்ட
தன்னிகரில்லாத் தலைவி
தவப்பெரும் புதல்வி
எதிரிகளின் சிம்மசொப்பனம்
எட்டரைகோடி மக்களின் ஏந்தல்
ஜெயலலிதாவை வணங்குகிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.