இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்றாலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை வரவேற்கிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு அடக்குமுறைகளும், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில்அவர்கள் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாமலும், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமலும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊதிய உயர்வுகள் கூட அனுமதிக்கப்படாமலும் கடந்த 2 ஆண்டு காலமாக கொடுந்துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் மட்டும் 1973 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சார்பில் சென்னையில் பிப்பரவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கவும், அந்நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல்கால களச் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட இந்த அறிவிப்பில் ஒரு வார்த்தை கூட ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, நடைபெற்ற போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத இரண்டு சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையின் பேரில் ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவித்திருப்பது போராட்டக் களத்தில் நின்ற சங்கங்களை மீண்டும் காயப்படுத்துவதாக உள்ளது.
எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். வேலை நிறுத்தக் காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய இடத்தில் பணியமர்த்திட வேண்டும். கடந்த காலங்களை போல் வேலைநிறுத்தக் காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.