சென்னை: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (ஏப்.16) நேரில் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக பெருங்களத்தூரில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். பெருங்களத்தூரில் 234.34 கோடி ரூபாய் செலவில் மேம்பால பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 69 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த மேம்பால பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பெருங்களத்தூர் ரயில் நிலையத்தை கடந்து சீனிவாசா நகர் செல்லும் பால பணிகள் முடிவுற்று இருப்பதாகவும், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை இறையன்பு ஆய்வு செய்தார். குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.