தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டப் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். நேற்று (மே.17) வரை இணையம் வழியாக ரூ.29.44 கோடியும் நேரடியாக ரூ 39.56 கோடியும் என மொத்தம் ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா மருத்துவ சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர், உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கன்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.