சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக, மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்குக் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் அடர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் கருணாநிதி சிலை அருகே தொடங்கிய அமைதி பேரணி காமராஜர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இந்த அமைதி பேரணியானது நடைபெற்றது.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவு நாள்: 'உங்கள் கனவுகள் நிறைவேறும் காலம்' என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்!
அமைதி பேரணி நடந்த ஒரு கிலோமீட்டர் தூரமும் ஆங்காங்கே தந்தை பெரியார், வள்ளலார், தமிழ் அறிஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், விவசாயிகள் எனப் பலர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் புகழஞ்சலி செலுத்துவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைதி பேரணி தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பேரணி தொடங்கி முடிவடையும் நேரம் வரை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்து மாற்றம் மற்றும் போக்குவரத்து காவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். குறிப்பாக முதல்வர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வு என்பதால் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவு தினம்: "தூரிகையாக மாறிய வாசகம்" - ஓவியர் செல்வம் அசத்தல்!
இந்த அமைதி பேரணியின் நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் உடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த அமைதி பேரணியில் கலந்துக்கொண்ட சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு கவுன்சிலர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநில சுயாட்சி நாயகன் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்..