சென்னை வேளச்சேரியிலுள்ள குருநானக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா முகாம்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுசெய்தார். அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கூறுகையில், ”நோய்த் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து மாநிலத்திற்குத் திரும்பியவர்களாலே நோய்ப் பரவல் உண்டாகிறது.
கரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது மாநிலத்தில் 54 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கு மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களின் அயராத உழைப்பே காரணம். அதேபோல் காவல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை மூலமாக மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
சில எதிர்க்கட்சிகள் எதற்கு இந்த ஊரடங்கு என்று கேள்வியெழுப்புகின்றனர். சாலையில் வேகத்தடை அமைப்பது போன்று தான், நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே ஊரடங்கே தவிர மற்றபடி எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. நோய் உள்ளவர்கள் வெளியில் சென்றால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே தனிமனித இடைவெளி மிக அவசியம்.
தற்போது 300ஆக இருக்கும் பரிசோதனை நிலையங்களை 450ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். இது ஒரு புதிய நோய்த் தொற்று. எப்படி பரவுகிறது என்பதை இதுவரை கண்டறியவில்லை. இப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்தக் காலகட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
சென்னையில் இருந்தும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்தும் செல்பவர்களால்தான் மற்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக ஏற்படுகிறது. கரோனா நோய்ப் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.