சென்னை பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி கை, கால்கள், வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல்பாகங்கள் காவல்துறையினரால் கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கால்,கை யாருடையது என திணறிவந்த காவல்துறையினர் சுமார் 15 நாட்களுக்கு பின் இதுதொடர்பாக, ஜாபர்ஹான்பேட்டை சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த தனது மனைவி சந்தியாவைதான் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனை அடுத்து கை,கால்களை மட்டும் கைபற்றிய பள்ளிக்கரணை போலீசார் மேலும் உள்ள உடல் பாகத்தை பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் சந்தியாவின் உடல் தான என்பதை உறுதிபடுத்துவற்கான மருத்துவ பரிசோதனை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை பள்ளிக்கரணை ,போலீசார் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தற்போது வரை இடுப்புக்கு மேல் பகுதி, தலை உள்ளிட்ட இரண்டு உடல் பாகங்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.