சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் பக்தர்களை வழிபட ஒரு வாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு தீட்சிதர்கள் பதாகைகள் வைத்தனர். பக்தர்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரை கடுமையாகத் தாக்கி பூணூலை அறுத்ததாக இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில், செய்தி நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்குப் பதிவுசெய்தது.
இந்த வழக்கில் முன் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், ஆளும் கட்சி நிர்வாகத்தில் அக்கறை கொண்ட நபரும், அரசு அதிகாரியுமான கிராம நிர்வாக அலுவலர் அளித்தப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை, காலை, மாலை என இருவேளையும் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "ரெய்டு நடவடிக்கைகளால் பாஜகவுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட நிலை தான் தொடரும்" - ஆர்.எஸ் பாரதி விளாசல்!