தமிழ்நாடு பாஜக கலை - கலாச்சார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வருபவர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன். இந்தநிலையில், இவர் இணையதளம் வாயிலாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தபுகாரில், உத்தரப் பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் குறித்து அவதூறான கருத்துகளை நடிகர் சித்தார்த் பரப்பி வருகிறார். சித்தார்த் ட்விட்டர் பதிவில், தவறான கருத்துக்களை பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி விழும் என உ.பி முதலமைச்சரை குறிப்பிட்டு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்பு அதிகாரத்தின் தார்மீக கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களுடன் கூடிய நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவுகள் இளைஞர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி, அவர்களை தூண்டிவிடும் வகையில் உள்ளது.
அவரது பதிவுகள் சமூகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளது. இளைஞர்களின் தலைவராகக் கொண்டாடப்படும் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தை குறிப்பிட்டு, இவ்வாறு பதிவிடும் ட்விட்டர் பதிவுகள் மூலம் ஒன்றாக செயல்பட்டு வரும் வெவ்வேறு பிரிவினரிடையே மோதல்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளது.
கரோனா தொற்றுப் பரவலுக்கு அரசு ஒருபுறம் போராடி வரும் நிலையில், சித்தார்த் அவரது ட்விட்டர் பதிவுகள் மக்களின் மனநிலையை தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளது. எனவே சித்தார்த்தின் இந்தச் செயலுக்கு அரசு உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரவல் சட்டம், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் கடந்த 24 மணி நேரத்தில் தனது தொலைபேசி எண்ணிற்கு தமிழ்நாடு பா.ஜ.க வினரிடம் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் மூலம் தனக்கு கொலை மிரட்டல், தனது குடும்ப பெண்களுக்குப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், அனைத்து ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.