சென்னை: கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான டிஜிட்டல் கார்டு ஒன்றை பாஜக உறுப்பினரான கருணாகரன் என்பவர் ட்விட்டரில் பரப்பி உள்ளார். அதே பதிவை பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவரான சி.டி. நிர்மல் குமாரும் டிவிட்டரில் அதனை ரீட்வீட் செய்துள்ளார்.
அவதூறு பரப்பும் வகையில் பதிவு: இதனிடையே, இந்த பதிவு அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருப்பதாகவும், உடனடியாக பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையிடம் பாஸ்கர் என்பவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, தவறான தகவல் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக பாஜக மாநில தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி. நிர்மல் குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நேற்று (ஏப்ரல்.8) சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நிர்மல்குமாரிடம் 4 மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, குறிப்பாக எதன் அடிப்படையில் இந்தப் பதிவு அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும்;
மேலும், பதிவு செய்ததற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதேபோல பதிவு செய்யப் பயன்படுத்திய செல்போனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் வழக்கு விசாரணை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், ''தன் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
திமுக அரசின் குற்றங்கள்: தீபாவளி பண்டிகையின்போது போக்குவரத்துத்துறை ஸ்வீட்ஸ் டெண்டரை தனியாருக்கு வழங்கியபோது, அதை பாஜக சுட்டிக்காட்டியதால் ஆவினுக்கு மாற்றப்பட்டது. அதேபோல பொங்கல் தொகுப்பு, முதலமைச்சர் பயணம் என திமுக அரசின் அவ்வப்போது நடைபெற்ற குற்றங்கள் பாஜக வெளிகொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத செயல்களைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறோம், கருத்துகள் ரீதியாகப் பதிவிடும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் மீது புகார் அளித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் 60 புகார்கள் பாஜக நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமித் ஷாவிடம் மனு: ஆனால், இந்த வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இதுதொடர்பாக ஆளுநரைச் சந்தித்து மனு அளித்து இருந்துள்ளதாகவும், அரசியல் ரீதியான பதிவுகளுக்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதாகவும், தொடர்ந்து கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் நிர்மல் குமார் வேதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களை நாட உள்ளதாகவும், அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் ஆளும் கட்சியினர் சட்டத்தை வளைத்து பாஜகவினருக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்ட உள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் தங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்பது போன்று திமுக செயல்படுவதாகவும், தங்களுக்கு எதிராக எவ்வளவு செயல்பட்டாலும் தொடர்ந்து நாங்கள் இதுபோன்று திமுகவின் தவற்றைச் சுட்டிக் காட்டுவோம்.
பாஜகவினரை மட்டும் குறிவைத்து வழக்கு: அவதூறு வழக்குகளை கிரிமினல் வழக்குகளாகக் கையாள திமுக நினைத்தால் நாளொன்றுக்கு 500 வழக்குகளைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும், திமுகவினர் உட்படப் பலர் பிரதமர் 15 லட்சம் ரூபாய் உடை அணிந்தார் என தவறான தகவலைத்தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறினார்.
மேலும், பாஜகவினர் மட்டும் இது போன்று செய்திகளைப் பரப்பவில்லை, பல கட்சியினரும் இதேபோன்று செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது இது போன்ற கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்காமல் பாஜகவினரை மட்டும் குறிவைத்து வழக்குத் தொடுப்பது உள்நோக்கம் கொண்டது.
அந்த செய்தியைப் பரப்பியது தவறுதான்: உண்மைத்தன்மை அறியாமல் சமூக வலைதளத்தில் அந்த செய்தியைப் பரப்பியது தவறுதான், மனிதன் இயல்பாகச் செய்யும் தவற்றைத்தான் நானும் செய்தேன், அவ்வாறு தவறு செய்ததாகச் சுட்டிக்காட்டும்போது நான் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டப் பல்வேறு பாஜகவினர் குறித்து தினந்தோறும் அவதூறு பரப்பும் வகையில் பதிவு இடப்படுகின்றது.
ஆனால், அது தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்தால் கிரிமினல் வழக்கு மேற்கொள்ளப்படவில்லை, எங்கள் மீது புகார் அளித்த உடனே கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. நான் பதிவு செய்தது உண்மை போன்று இருந்ததை ஒட்டியே நம்பி பதிவு செய்தேன். ஆனால் பின்னர்தான் அது போலி எனத் தெரியவந்தது.
ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: எனவே, எதை நம்பி நான் அந்த பதிவை செய்தேன் என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். பல்வேறு ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து எந்த சூழ்நிலையில் அதைப் பதிவு செய்தேன் என்பதை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பேன். சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான போலியான செய்திகள் பல குழுக்களாகவும், தனிநபர்களாலும் பகிரப்படுகின்றன.
மேலும், இதனைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். பாஜகவினரை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு காவல்துறையினர் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். குறிப்பாகப் போலியாகப் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலையை உயர்த்தும் சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது - சி.பி. ராதாகிருஷ்ணன்