சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித்தீர்மானம், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முன்மொழிந்தார்.
இதில் தனித்தீர்மானம் மீதான தனது கருத்துக்களை தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “இந்த சட்டமன்றம் மரபும், மாண்பும் கொண்டது. இதை பொதுக்கூட்ட மேடையாக்கி விடக்கூடாது. இது போன்று செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மேலும், இதே அவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஆளுநர்தான் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என பேசியிருக்கிறார். ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “அப்போது வேந்தர் மற்றும் துணை வேந்தர் எல்லாம் அரசினுடைய பரிசீலனைக்குக் கொண்டு வந்து கலந்து ஆலோசித்து, அதற்கு பிறகுதான் நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அப்படி அல்ல. அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. எனவேதான் நீட் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அனுப்பினோம். மேலும், ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது. அவர் சட்டத்தை மதித்து நடந்தால், அவரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவருடைய செயல்பாடுகள் அப்படி இல்லை.
மேலும் நீதிமன்ற பரிந்துரைகளின் அடிப்படையில்தான், துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமிக்கலாம் என்ற தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். துணை வேந்தர்களை முதலமைச்சர் மூலம் முதல் முதலாக குஜராத்தில் பாஜகதான் நியமித்தது. மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மக்கள் விரும்பும் வகையில் ஆளுநர் இல்லை" என தெரிவித்தார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், துணை வேந்தர்களை நியமிக்கக் கூடாது என நயினார் நாகேந்திரன் பேசினார். ஆனால், மேற்குவங்க மத்திய பல்கலை துணை வேந்தர் பிரதமர்தான், அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்தானே” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல மாநிலங்களில் முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகே துணைவேந்தர்களை நியமிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது அப்படி இல்லை. தமிழகத்தின் அனைத்து பல்கலைகழக வேந்தராக முதலமைச்சர்தான் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனித்தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!