சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை.05) சட்டப்பேரவை விதிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 12 குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, "வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன் தொடுதிரை வைப்பது, உறுப்பினர்களுக்கு டேப்லேட், கையடக்க கணினி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்தனர்.
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் படிப்படியாக மற்ற தொழில்நுட்ப வசதிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் - ஏ.கே.ராஜன் குழு நியமனம் தொடர்பான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு