ஹைதராபாத்: உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏழுமலையான தரிசிக்கப் பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். இவர்களுக்காகப் பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சிறப்புப் பூஜைகள், புரட்டாசி பிரம்மோற்சவம் ஆகிய மிக முக்கியமான நிகழ்வுகள் கொரோனா காலத்தில் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது. இதற்கிடையே, வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏழுமலையான் கோயிலைச் சுற்றியுள்ள மலைகள் பெரும் சேதத்தை கண்டன. கோயில் பிரகாரங்களில் கூட மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதுபோன்ற பல்வேறு இடையூறுகளுக்கு மதியில் கரோனா பரவல் குறைந்த பிறகு முகக்கவசம் அணிதல், கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், 24 மணிநேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்று வைத்திருப்பவர்கள் என கட்டுப்பாடுகளுடனே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் என்றும் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதோடு 2 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்ய தரிசனம் எனும் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அலைமோதுகிறது.
ஆந்திரா மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறையானது தொடங்கியுள்ள நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. திருப்பதி நகரம் முழுவதும் ஆட்டோ, பேருந்துகளின் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கின்றன.
ரூ.300 சிறப்புத் தரிசனத்திற்குக் கூட சுமார் 5 மணிநேரம் காத்திருக்க வேண்டும். திவ்ய தரிசனம் மற்றும் பேருந்து, கார்களில் திருமலை செல்வோர் சுமார் 40 மணிநேரம் காத்திருந்து சாமியைத் தரிசனம் செய்கின்றனர். 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதால் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்!