தண்ணீர் தட்டுப்பாடு போர்க்கால அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினர் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்டாலின் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முழுக் காரணம் ஆளும் அதிமுக அரசுதான். தண்ணீரை சேமிக்கும் விஷயத்தில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. தண்ணீர் பஞ்சம் வரும் என ஏற்கனவே நான் பல ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசை எச்சரித்தேன். ஆனால், ஆட்சியாளர்கள் அதற்கான எந்தப் பணிகளிலும் ஈடுபடவில்லை.
யாகம் நடத்துவதை தவறு என்று நான் கூறவில்லை; ஆனால் இந்த தண்ணீர் தட்டுப்பாடு திடீரென்று வரவில்லை. யாகம் நடத்துவது அவர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குத்தானே தவிர தண்ணீர் சிக்கலுக்கு அல்ல.
அமைச்சர் வேலுமணி இருக்கும் துறை உள்ளாட்சித் துறை இல்லை; ஊழலாட்சித் துறை. அவரை வேலு மணி என்று அழைப்பதைவிட ஊழல் மணி என்றுதான் அழைக்க வேண்டும். விரைவில் திமுக தலைமையில் ஆட்சி அமையக் போகிறது. ஆட்சி அமைத்த உடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கும் அமைச்சர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.