சென்னை: சென்னை கோட்டத்தில், நேற்றைய முன்தினம் (அக்.12) அன்று அதிரடியாக டிக்கெட் பரிசோதகர்கள், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 539 டிக்கெட் பரிசோதகர்கள் ரயில் நிலையங்களில், மெமு ரயில், புறநகர் ரயில்கள், மெயில், எக்ஸ்பிரஸ் என பல ரயில்களிலும் சோதனையானது ஒரே நாளில் நடைபெற்றது.
இந்த சோதனையில் ஒரே நாளில் டிக்கெட் இல்லாமல், முறையான பயணம் செய்யமால் இருந்ததற்காக 4,404 வழக்குகள் பதிவு செய்து, ரூ.20.19 லட்சம் அபராதமாக விதிக்கபட்டுள்ளது. இந்த நிதியாண்டில், ஒரே நாளில் அதிகமாக அபராதம் வசூல் செய்யப்பட்டது இதுதான் என்று சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் கூறியதாவது, “சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையானது அவ்வப்போது திடீரென நடைபெறும். அந்த வகையில் நேற்று இந்த டிக்கெட் சோதனையானது சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட புறநகர் ரயில்கள், மின்சார ரயில்கள், மெயில் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பல வகைகளில் நடைபெற்றது.
இந்த சோதனையில் 539 டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபட்டனர். அப்படி பரிசோதனை செய்யப்பட்டதில், முறையின்றி பயணம் செய்தவர்கள், டிக்கெட் இல்லாதவர்கள், சரியான டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், முறையான ரயில்வே பாஸ் இல்லாதவர்கள், முன்பதிவு செய்யாத பார்சல்கள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டன.
இதில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,934 பேர்களிடமிருந்து ரூ.10.25 லட்சம் அபராதமும், முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்த 1,832 பேர்களிடமிருந்து ரூ.8.41 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. அதேபோல், முறையான உடமைகளுக்கு டிக்கெட் இன்றி 20 பேர்களிடமிருந்தும், புகை பிடித்தல் என 618 பேர்களிடமிருந்து அபராதம் என ரூ.1.53 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மேலும், டிக்கெட் பரிசோதகர்கள் தொடர்ந்து பயணிகளின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், காலியான முன்பதிவு இருக்கைகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது, முறையான டிக்கெட் இருக்கிறதா என்று பார்ப்பதுமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதிய பாகுபாட்டால் ஊராட்சி தலைவரை பதவி ஏற்க விடாமல் தடுக்கும் உறுப்பினர்கள்.. புதுக்கோட்டையில் தொடரும் அநீதி..!