சென்னை: திரௌபதி இயக்குநர் மோகன் ஜீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி திரைப் படங்களைத் தொடர்ந்து தற்போது நான் இயக்கியுள்ள 'ருத்ரதாண்டவம்' திரைப்படமும் விரைவில் திரையரங்கில் வெளிவர உள்ளது. கடந்த வாரம் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) வெளியாகி, ஐந்து மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி, சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒரு படைப்பாளியாக, திரைப்படத்துடன் இலக்கியத்தையும் வரலாற்றையும் தமிழ்ச் சமூகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு 'திரெளபதி பதிப்பகம்' தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வாயிலாக, வரும் 10, விநாயகர் சதுர்த்தி அன்று 'வென்று மண்கொண்டான்' என்ற வரலாற்று நூலை வெளியிடவுள்ளேன்.
பிற்காலச் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அவர்களிடம் குறுநில மன்னர்களாகப் பணியாற்றிய சம்புவராய அரசர்கள் கி.பி. 1,236 தொடங்கி படைவீட்டைத் தலைநகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களின் ஆட்சிக்காலத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பால் தென்னிந்தியா மிகப்பெரும் இன்னலைச் சந்தித்தது. குறிப்பாக, ஆந்திராவில் ஏற்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் அஞ்சி இவர்களின் ஆட்சிப்பரப்பிற்குள் வந்தபோது அவர்கள் பாதுகாப்புடன் வாழ அவர்களுக்கு 'அஞ்சினான் புகலிடங்களை' ஏற்படுத்தி பாதுகாப்புடன் வாழச் செய்துள்ளனர்.
ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் ஏற்படுத்தி, வேளாண் உற்பத்தி பெருக்கப்பட்டன. நாணயங்களை அச்சிட்டு வெளிட்டுள்ளனர். கடல் வணிகம் செழித்திருந்தன. கூத்துக் கலை வளர, கலைஞர்களுக்கு உரிமை வழங்கியுள்ளனர். அத்துடன் சமய விழாக்கள், வழிபாட்டிற்காக இறையிலி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய அறம் செறிந்த ஆட்சி நடத்திய சம்புவராய மன்னர்களைப் போற்றும்விதமாக, 1989 செப்டம்பர் 30ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவண்ணாமலைக்கு 'சம்புவராயர் மாவட்டம்' என்று பெயர் சூட்டினார்.
தமிழ் நிலத்தில் கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை நின்று நிலைத்த தமிழ்ப் பேரரசு என்ற புகழுக்கு உரியது 'சம்புவராயர் அரசு' ஆகும். எனவே, அவர்களின் மாண்புகள், ஆட்சித்திறன், நிர்வாக முறை, ஆட்சிப் பரப்பு மற்றும் தமிழ்நாட்டின் இடைக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் யாவற்றையும் வெளிக்கொண்டுவரும் விதமாக இந்த ஆய்வு நூலை பேராசிரியர், அ. அமுல்ராஜ் எழுதியுள்ளார். இந்நூலை, திரெளபதி பதிப்பகம் வாயிலாக, முதல் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாராள பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம்!