தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதோடு தடுப்பூசி போடுவதையும் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் கரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன், வெண்டிலேட்டா், மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு பெருமளவில் வரவழைத்து வருகிறது.
இந்தச் சூழலில், டெல்லியிலிருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்களில் மூன்று டன் மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமானநிலையத்துக்கு வந்தன. இரண்டு விமானங்களிலும் 68 ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், 45 வெண்டிலேட்டா்கள், இரண்டு லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் RT-PCR கிட்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை வந்திறங்கின.
அதன்பின்பு விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில், இந்தியன் ஏா்லைன்ஸ் ஊழியர்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமானநிலைய அலுவலர்களிடம் கொடுத்தனா். அவா்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களிடம் அதனை ஒப்படைத்தனா். அதன்பின்பு பொருள்களை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அடுத்த சில நாள்களில் மேலும் சில விமானங்களில் டெல்லி, நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழ்நாடு வரவிருப்பதாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனா்.
இதையும் படிங்க: முன்பதிவு மையங்கள் குறைப்பு - தெற்கு ரயில்வே!