சென்னையினை அடுத்து பள்ளிக்கரணைப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த மூவரைப் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அடையாறு பகுதியைச்சேர்ந்த கலையரசன்(36), தண்டையார்பேட்டையைச்சேர்ந்த சதீஷ்குமார்(40), பெருங்குடியைச்சேர்ந்த ராஜி(30) எனத் தெரியவந்தது.
இவர்கள் மூவரும் ரயில் மூலம் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவைக்கடத்தி வந்து சென்னை புறநகர்ப்பகுதி முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:காதலியை கொலை செய்த செய்தியாளர்... உடலை மறைக்க சென்றபோது சிக்கினார்