சென்னை மாவட்டம் வில்லிவாக்கத்திலிருந்து புறநகர் பகுதியான ஆவடிக்கு, அம்பத்தூர் வழியாக காரில் கஞ்சா கடத்தி செல்வதாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலனின் பேரில் துணைக் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரம் அய்யப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வேகமாக வந்த காரை காவல்துறையினர் வழிமடக்கி சோதனை செய்தனர். சோதனையில், காருக்குள் பிளாஸ்டிக் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர், அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், காரில் கஞ்சாவை கடத்தியது அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த ரவுடி அப்பன்ராஜ் (36), அதேபகுதியை சேர்ந்த முகமது அலி (19), முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் மூவரும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஹேமந்த் ராஜ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி, ஆவடியில் விற்பனை செய்ய கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இவர்கள் மூன்று பேர் மீதும் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாகியுள்ள ஹேமந்த் ராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தில் 864 கிராம் தங்கம் கடத்திய நான்கு பேர் கைது!