சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் மற்றும் ஒப்பந்ததாரருமான காமராஜ் என்பவரை அக்டோபர் 26ஆம் தேதி, அவரது அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்தவர் காமராஜ், என்ஜினீயரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் இவர், மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தியுடன் அலுவலகத்திற்குள் புகுந்து, காமராஜை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரணையில், ரவுடி கும்பல் மாமூல் கேட்ட தகராறில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலையின் பின்னணியில், பிரபல ரவுடி ஒருவர் இருப்பதும், அவர் புழல் சிறையில் இருந்து கொண்டு திட்டம் தீட்டி கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளி தனியாக நிர்வாகத்தை நடத்தில் அரசுக்கு பிரச்சனை தரக் கூடாது: நீதிபதி கருத்து
இதனையடுத்து, எண்ணூர் போலீசார், இது தொடர்பாக இரண்டு தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், காமராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்கள் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியது.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகியவர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்த நபர்களையும் பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு சிசிடிவி காட்சிகளுடன் டிஜிபி விளக்கம்!