திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் வேணுகோபால் சுவாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமான மூன்று சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தரும்படியும் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் புகார் ஒன்றை அளித்திருந்தார். புகாரின் தொடர்பாக அப்போது அதிகாரிகள் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த புகாரின் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மறு விசாரணைக்கு எடுத்துள்ளனர். காணாமல் போன மூன்று சிலைகளின் புகைப்படங்கள் கிடைக்காததால் பிரென்ச் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாண்டிச்சேரி என்ற அமைப்பில் ஆய்வு செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புகைப்படங்களை பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து அந்தப் புகைப்படங்களின் அடிப்படையில் உலகெங்கும் உள்ள அருங்காட்சியகங்களில் சிலைகள் இருக்கின்றதா என தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விசாரணையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன மூன்று சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
1959 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தி அமெரிக்காவில் உள்ள மூன்று சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காணாமல் போன மூன்று சிலைகள் என தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது குறித்து அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடிதங்கள் எழுதி உள்ளனர்.மேலும் சிலைகளை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டாக்டர் சரவணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அண்ணாமலை