கரோனா ஊரடங்கின் மத்தியில் வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பணப்பற்றாக்குறையில் பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில், வேலை இழந்து தவித்து வந்த சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், ஆன்லைன் மூலமாக வேலை தேடி வந்துள்ளார்.
அப்போது www.Times4job.com என்ற வலைதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்புகள் குறித்து அவர் தேடியதை அடுத்து, அந்த வலைதளத்தில் இருந்து சிவசங்கரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறும், பிரபல நிறுவனத்தில் தாங்கள் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சிவசங்கரை நம்ப வைத்துள்ளார்.
இதனை அப்படியே நம்பிய சிவசங்கர், ஆன்லைன் மூலமாக அந்த வலைதளக் கணக்கிற்கு மூன்றாயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு நீண்ட நாள்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சிவசங்கர் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது தாங்கள் வெளிநாட்டில் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாகவும், அதற்கு மேலும் எட்டாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் எனக்கூறியும், தொடர்ந்து சிவசங்கருக்கு உரிய வேலை கிடைத்து விட்டதாகவும் ஆனால் வெளிநாட்டிற்கு செல்ல லட்சக்கணக்கில் செலவாகும் எனக் கூறியும் அவரை நம்ப வைத்து, மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரை அவரிடம் அந்த வலைதள நபர் பெற்றுள்ளார்.
நாளடைவில் வேலை குறித்த எந்தத் தகவலும் தனக்குத் தெரிவிக்கப்படாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவசங்கர், உடனடியாக ஆன்லைன் மூலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இதே போல் பல்வேறு புகார்கள் தங்களுக்கு வந்த நிலையில், வங்கி மோசடி தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்த நபரின் செல்போன் எண் டெல்லியைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் டெல்லிக்கு விரைந்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஆரிப் கான் (வயது 31),வாஜித் கான் (வயது 29),சந்தீப் குமார் (வயது 24) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, இதே போல் பலரிடம் அவர்கள் மோசடி செய்து வந்தது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இது போன்று வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும், போலி வலைதளங்களை நம்பி பொது மக்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday