கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுப் பரவலைத் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழிற்சாலைகளை 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தொழிற்சாலையான ஹூண்டாய் கார் தொழிற்சாலை, கடந்த மே எட்டாம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தச் சூழலில், தற்போது அங்கு பணிபுரியும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தகுந்த இடைவெளியுடன் தொழிற்சாலையில் பணியாளர்கள் பணிபுரிந்துவந்த நிலையிலும், மருத்துவப் பரிசோதனையில் மூன்று பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பணியாளர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கரோனா பரவலால் தொழிற்சாலை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : உள்நாட்டு விமான சேவை தொடக்கம்: சென்னையில் 15 விமானங்கள் ரத்து!