சென்னை: சென்னை சர்வதேச புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தின் முதல் ஃபேஸ் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம், புரதான நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்களின் ஓவியங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய முனையத்தில் 30 மில்லியன் பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளுடன் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி சோதனை ஓட்டம் அடிப்படையில், வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகளுக்கு பூக்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று அந்த புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் மேலும் 3 புதிய விமானங்கள் இயக்கப்பட்டன. அதாவது சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்களும் இயக்கப்பட்டன.
இந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகள், நெரிசல், நீண்ட வரிசை போன்ற கூட்டம் இல்லாமல், சாதாரணமாக சமூக இடைவெளியுடன் கூடிய வரிசைகளில் நின்று, குடியுரிமைச் சோதனை, சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைப்போல் வருகை பயணிகள், கன்வயர் பெல்ட்டுகளில் வந்த தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வெளியேறிச் சென்றனர்.