சென்னை தாம்பரம் அடுத்த ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 12 வயதுடைய விஷாந்த், கோகுல், சுனில்குமார் என்ற மூன்று சிறுவர்கள், அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவந்தனர்.
இச்சிறுவர்கள் நேற்று (ஏப்.13) மாலை முதல் காணவில்லை என்பதால், சிறுவர்களின் பெற்றோர்கள் அப்பகுதி முழுவதும் தேடிவந்தனர். இந்நிலையில் சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் மூன்று சிறுவர்களின் உடைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கிய தகவல் அறிந்த அப்பகுதியினர், ஏரித்கரையில் திரண்டு இருந்தனர்.
இதனையடுத்து சிட்லப்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி ஏரியில் இறங்கி சிறுவர்களைத் தேடிவந்த நிலையில் சுனில் குமாரின் உடல் கிடைத்தது.
அதையடுத்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடியதில், மேலும் இரு சிறுவர்களின் உடல்கள் ஏரியிலிருந்து மீட்டு காவல் துறையினரிடன் ஒப்படைத்தனர்.
சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றிய சிட்லப்பாக்கம் காவல் துறையினர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்து, இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நிலத்தை அபகரிக்க காவலர் உடையில் சென்று மூதாட்டியிடம் தகராறு செய்தவர் கைது