சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஏடிஎம்-இல் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதைக் கடந்த 16ஆம் தேதி பணம் எடுக்கவந்த நபர் கண்டுபிடித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு அவர் புகார் அளித்தார். இதையடுத்து ஏடிஎம்-மை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், ஸ்கிம்மர் கருவி மற்றும் 'பின்' நம்பரை கண்டறிய பயன்படுத்திய சிசிடிவி கருவி ஆகியவற்றை கண்டறிந்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்ற பிரிவினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், இச்சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏடிஎம் கார்டுகளில் இருந்து பணம் திருடப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்தன. குறிப்பாக கவரப்பேட்டை பகுதியில் உள்ள 2 ஏடிஎம்களில் கார்டுகளை பயன்படுத்திய பிறகே பணம் பறிபோனது தெரியவந்துள்ளது. அந்த ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அயனாவரத்திலும், திருவள்ளூரிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செல்போன் சிக்னல்கள் வைத்து கொள்ளையர்களை காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூவரை இன்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அல்லா பகாஷ், அப்துல் ஹாதி, இர்பான் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், "அயனாவரத்தில் ஸ்கிம்மர் கருவியை கண்டுபிடித்த உடனே, திருவள்ளூர் கவரப்பேட்டையில் உள்ள 2 ஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். இதற்காக பல போலி கார்டுகளை அடித்துள்ளனர். தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கும் முன்பே ஒரே நாளில் ரூ.10 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வெளிமாநிலத்திற்கு தப்பி சென்றுவிட்டார். அவரிடம் பல வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் உள்ளன. அவரை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றனர்.
குறிப்பாக காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களை குறிவைத்தே, ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளை அடித்தது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளையடித்தார்களா, இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.