சென்னை பழைய பல்லாவரம், திருவிக தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(43). இவர் துறைமுகத்தில் கார்கோ பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மாடி அறையை பூட்டிவிட்டு கீழ் தளத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி 21) இரவு தூங்கியுள்ளார். நேற்று காலை (ஜனவரி 22) எழுந்து சென்று பார்த்த போது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சிகள், கைரேகைகள் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு காவல் துறையினர் கொள்ளையர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில், சிறுவன் உட்பட பல்லாவரத்தை சேர்ந்த சஞ்சய் (எ) குட்டி புலி(20), கார்த்திக்(22) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அரை சவரன் தங்க நகை, 10 கிராம் வெள்ளி, 9,700 ரூபாய் ரொக்கம் இவை மட்டும்தான் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தனர். அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரை புழல் சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்களிடம் கொள்ளைப்போன நகைகளின் விவரங்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.