சென்னை: கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் ராஜன் பாபு (60). இவர் காற்றாலை மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வந்துள்ளார். தொழிலதிபரான அவரின் தொழிலை விரிவுபடுத்துவதற்காக 500 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் தொழில் செய்து வருவதாக சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த ஏஜெண்ட் சரவணன் என்பவரின் அறிமுகம் ராஜன் பாபுவிற்கு கிடைத்துள்ளது.
அப்போது தனது பணத்தேவையை ராஜன் பாபு சரவணனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தனக்கு வெளிநாட்டில் இருந்து 540 கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாகவும், அதில் 500 கோடி ரூபாய் கடனாகத் தருகிறேன், எனவும் ஆனால் அதற்கான கமிஷன் தொகை 12 கோடியே 60 லட்சம் ரூபாயை முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும் என சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும், சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி மேலாளர் பாலாஜியிடம் 12 கோடியே 60 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் நீங்கள் கேட்ட 500 கோடி ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என சரவணன் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராஜன் பாபு, நேற்று சென்னை வந்து 12 கோடியே 60 லட்ச ரூபாய்க்கான காசோலையை வங்கி மேலாளரிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் 12 கோடியே 60 லட்சம் ரூபாயை, சரவணன் வங்கிக் கணக்கிற்கு பாலாஜி மாற்றியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சரவணன் சொன்னபடி ராஜன் பாபுவுக்கு பணம் வந்து சேராததால் அவர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சரவணன் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து தொழிலதிபர் ராஜன் பாபு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜன் பாபு உடனடியாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தீவிர விசாரணை நடத்தி தனியார் வங்கி மேலாளர் பெரம்பூர் பாலாஜி (29), சரவணன் அலுவலகத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றும் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த புவனேஷ் (22), கார் ஓட்டுநர் அரும்பாக்கம் கோவிந்தன் (25) ஆகிய மூன்று பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஏஜெண்ட் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேரை இதே போல் ஏமாற்றி உள்ளனர் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. 12.60 கோடி ரூபாய் மோசடி என்பதால், இந்த வழக்கு விரைவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.