சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இவர் சங்கர் நகர் காவல் நிலையம் அருகேயுள்ள சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சரவணனின் செல்போனை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தார்.
இந்த சம்பவத்தின் போது நிலைகுலைந்து விழுந்த சரவணனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சரவணன் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சங்க நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதேபோல் மற்றொரு சம்பவத்தில், அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து சங்கர் நகர் காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இரண்டு நபர்களிடமிருந்தும் செல்போனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர்.
இந்த விசாரணையில் சிசிடிவியில் பதிவாகியுள்ள நபர் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து சங்கர் நகர் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர், மணிகண்டனுக்கு உதவிய அவரின் நண்பர்களான நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த வினோத் (19), ஸ்டீபன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ஐந்து செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த மூவரிடம் மேற்கொண்ட விசாரணையில், புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் தனியாக இருக்கும் நபர்களிடமிருந்து செல்போன்களை திருடிச் சென்று, பின்னர் அதனை ஓஎல்எக்ஸ் (OLX) மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. குறிப்பாக, இவர்கள் செல்போன் திருடுவதற்காக முதலில் இருசக்கர வாகனத்தை திருடுவதும், பின்னர் அந்த இருசக்கர வாகனத்தின் மூலம் செல்போன் திருட்டில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் மணிகண்டன் என்பவர் மூன்று வருடங்களுக்கு முன்பு செல்போன் திருட்டு வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓ.எல்.எக்ஸ் மோசடி: ஊரே திரண்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலம்!