சென்னை: காசிமேடு பாலகிருஷ்ணா தெருவில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
அதன் அடிப்படையில், ராயபுரம் சரக உதவி ஆணையாளர் உக்கிர பாண்டியனின் ஆணைக்கிணங்க காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர், தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஆக.27) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, ரெட்ஹில்ஸ் வரை பின்தொடர்ந்து சென்று அங்கு காரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவலர்கள் கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் மேற்கொண்டனர்.
வழக்கறிஞர் ஸ்டிக்கர் வைத்து கஞ்சா விற்பனை
அவ்விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண், மணலிபுதுநகர் பகுதியைச் சார்ந்த பார்வதி, காசிமேட்டில் பல குற்ற வழக்கில் தொடர்புடைய வண்டலூர் பகுதியைச் சார்ந்த கனகராஜ், நரேஷ் குமார் ஆகிய நபர்கள் எனத் தெரியவந்தது. மேலும் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா, வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பார்வதி மீது ஏற்கனவே எண்ணூர், எம்கேபி நகர், ரெட் ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று கனகராஜ், நரேஷ் குமார் மீதும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மூன்று பேரையும் கைது செய்து இன்று (ஆக 28) நீதிமன்றம் முன் நிறுத்தி, தொடர்ந்து அவர்களை மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சொகுசுக் கார் மோதி காவலர் உயிரிழப்பு- ஒருவர் கைது