சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் நடேசன். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஆயிரத்து 400 சதுரஅடி நிலம் திருநின்றவூர் பகுதியிலுள்ள லட்சுமி பிரகாஷ் நகரில் உள்ளது.
நடேசன் சென்னை வரும்போதெல்லாம் தனக்குரிய இடத்தை பார்த்துச் செல்வது வழக்கம். கடந்தாண்டு நடேசனின் மனைக்கு பக்கத்து மனையில் சிலர் சுத்தம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்த நபர்கள் நடசேனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது இடம் குறித்து வில்லங்கம் போட்டு பார்த்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவரது இடத்தை கடந்த 2016ஆம் ஆண்டு அயப்பாக்கத்தைச் சேர்ந்த துரை என்பவர் தனது மகன் ஏசுதாஸ் என்பவருக்கு ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பாகப்பிரிவினை பத்திரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
பின்னர், ஏசுதாஸ் அந்த இடத்தை கடந்த 2017ஆம் ஆண்டு அன்று ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கனகராஜ் என்பவருக்கு பொது அதிகார ஆவணத்தை போலியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதன்மூலம் தனக்குச் சொந்தமான நிலத்தை அடையாளம் தெரியாத நபர்கள் போலி ஆவணம் மூலம் அபகரித்தது நடேசனுக்குத் தெரியவந்தது.
இதுதொடர்பாக, நடேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், 2 ஆயிரத்து 400 சதுர அடி காலி மனையை துரை என்பவர் மூலம் மோசடி செய்தது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இந்த மோசடியில் தொடர்புடைய பட்டாபிராமைச் சேர்ந்த ஏசுதாஸ், ஜோசப், சாமுவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மக்காச்சோளக் காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!