சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி இருசக்கர வாகனத்தில் பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை புதுபேட்டையில் இளைஞர் ஒருவர் குறைந்த விலைக்கு எவ்வித ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கடையின் உரிமையாளர் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், அந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியல், அனகாபுத்தூரில் திருடப்பட்ட சத்தியமூர்த்தியின் இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தையும், பிடிபட்ட இளைஞரையும் சங்கர் நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (37) என்பதும், தனது நண்பர்கள் மணிகண்டன் (26), சினிவாசன் (40) ஆகியோருடன் சேர்ந்து பல பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ ஊழியர் கைது!