சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன் உள்ளிட்ட உடமைகள் திருடப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பேர் செல்போன் சார்ஜ் போடுவதுபோல வந்து அங்கு சார்ஜ் போடப்பட்டிருக்கும் பயணிகளின் செல்போன்களை திருடிச் செல்வது தெரியவந்தது.
அதனடிப்படையில் கண்காணிப்பை காவல் துறையினர் தீவிரப்படுத்திய நிலையில் நேற்றிரவு (ஜூலை 14) திருட வந்த 3 பேரை ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அம்மூவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாரி செல்வம் (24), யஸ்வந்த் சுனானி (24) மற்றும் விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. மேலும் 3 பேரும் குடி மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும், சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே தங்கி இரவு நேரங்களில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளின் செல்போன் உள்ளிட்ட உடமைகளை திருடி வந்ததும் தெரியவந்தது.
அவர்கள் 15 செல்போன் வரை திருடியுள்ளதும், திருடிய செல்போன்களை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்று அந்த பணத்தை குடிக்கவும், கஞ்சா வாங்கவும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையினர் கைது செய்த மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தூம் பட பாணியில் கொள்ளை: கர்நாடக மாநில கொள்ளையன் கைது