சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உள்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மினி கிளினிக் தொடங்கப்பட இருப்பதால் ஒவ்வொரு பகுதிகளிலும் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் கண்டைனர் பெட்டியில் கிளினிக் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடந்தன.
அதேபோல், சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் நான்கு லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன வசதியுடன் பயோ கழிப்பறை உடன் கண்டைனர் பெட்டியில் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் வசதிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "டெல்லி வழியாக சென்னைக்கு வந்தவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இந்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் பட்டியல், விமானத்துறை அலுவலர்களுடன் இணைந்து தயார் செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போதும், அதுபோலவே தீவிர கண்காணிப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு வந்த அனைத்து பயணிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றங்களை தீவிரமாக கண்காணிக்கப்படும்.
ஐஐடியில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அனைத்து கல்லூரியிலும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம்!