சென்னை: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா அண்மையில் ஜவாஹிருல்லாவுக்கு எதிராக அபாண்டமான முறையில் அவதூறு செய்து பேட்டி அளித்துள்ளார்.
'ஜெயிலர் ஜெயப்பிரகாஷைக் கொன்ற அல்-உம்மாவோட ஆளு, இன்னைக்கு பாபநாசத்தோட எம்எல்ஏ' என்ற பொய்யான தகவல்களைக் கூறியுள்ளார். அத்துடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கோயில் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு உரிமை இல்லை. 'அவர் நிதி மந்திரி அவரை அவன் இவன் என்று பேசுவதற்கு எனக்கு முடியாதா?' என்றும் கேட்டுள்ள ஹெச். ராஜா 'வெளிநாட்டில் படித்துவிட்டு வெளிநாட்டில் திருமணம் பண்ணிவிட்டு குடும்பம் நடத்தறவர், தமிழனாக இருக்க முடியாது. அவர் ஒரு தமிழனே கிடையாது' என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் பரவி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அவதூறு செ்யவதும், வெறுப்பு பரப்புரை செய்வதும் ஹெச். ராஜாவுக்கு வாடிக்கையான ஒன்றாகவுள்ளது. ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவர் இழிவுபடுத்திப் பேசியதையும், அவர்மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக மன்னிப்பு கோரியதையும் நாடே அறியும். தொடர்ந்து ஹெச். ராஜாவை இப்படி பேச அனுமதித்தால் சமூகத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படும்.
தமிழ்நாடு அரசும் மக்களும் கரோனா பேராபத்தை எதிர்கொள்வதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தச்சூழ்நிலையில் ஹெச்.ராஜாவின் இத்தகைய பேச்சுகள் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதுடன் அரசின் செயல்பாடுகளையும் மக்களின் கவனத்தையும் திசை திருப்புவதாக இருக்கிறது. எனவே, ஜவாஹிருல்லா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பேசியுள்ள அவர்மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரை சிறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இழிவாக பேசுவதே திமுகவிற்கு வேலை- எச். ராஜா