இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடிபெயர்ந்த தொழிலாளர் பிரச்னையைத் தாமே முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; இதற்காக சிறப்பு ரயில்களை விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பிற மாநிலங்களில் வேலை செய்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்; அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்து இருக்கும் நிலையில், இனிமேலாவது மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து, தமிழ்நாட்டிலேயே பணி அமர்த்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு வேலைதேடிச் செல்வதைத் தடுக்கவேண்டுமெனில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், கட்டுமான வேலைகள், உணவகங்கள் முதலானவற்றில் பணி அமர்த்தம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றை வெளியிடவேண்டும் என வலியுறுத்துகிறோம்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.