பொன்பரப்பி கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொன்பரப்பியில் பட்டியலின மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தி, அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரியலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் வன்முறையில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வாக்கு செலுத்த முடியாமல் சென்றதால், அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதனை அரியலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். வாக்குச்சாவடியின் உள்ளே எந்த ஒரு கலவரமும் நடக்கவில்லை என்ற பிரிவின்படி மறுதேர்தல் நடத்த இயலாது என்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம். அந்தக் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் தாமாகவே முன்வந்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களை வாக்களிக்க விடவில்லை என்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் தனித்தனியே மனு தந்துள்ளனர். அந்த மனுக்களையும் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் அளித்தோம். மறுதேர்தல் நடத்த வேண்டும் என்னும் எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு துணையாக செயல்படுகிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்துள்ளனர். தங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினர்தான் செய்துள்ளனர் என்று தெரிந்தும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த கலவரத்திற்கு பாமகவினர் மட்டுமே காரணம். இதைத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும்.
1,007 மொத்த வாக்காளர்கள். அதில் 680 பட்டியலின மக்கள் வாக்களிக்க முடியாத அளவில் அச்சுறுத்தல் நடந்துள்ளது. அதன்பின் கள்ள வாக்கும் போடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் போராட்டத்தை, அரியலூரில் ஏப்ரல் 24ஆம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.