சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி - சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் நிகழும். நிலவு சூரியனைவிட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது.
நிலவுக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமார் 400 மடங்கு அதிகம். அதே நேரம் நிலவின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் சுமார் 400 மடங்கு அதிகம். எனவேதான் சூரியனும் சந்திரனும் வானில் ஒரே அளவு தோற்றம் கொண்டது போல் தோன்றுகின்றன. இதனால்தான் முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கின்றது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் நிலவால் முழுமையாக மறைக்க இயலாது.
அப்போது ஒரு கங்கணம் (வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரியும். இதனை விஞ்ஞானிகள் கங்கண சூரிய கிரகணம் என்று அழைப்பர். இந்த கங்கண சூரிய கிரகணம் இந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நிகழ்வு தென் தமிழ்நாட்டில் மிகத் தெளிவாகத் தெரியும்.
இதனையடுத்து அடுத்தாண்டு ஜூன் மாதம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியான, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற கங்கண சூரிய கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் இதற்கு முன்னர் 2010 ஜனவரி 15ஆம் நாள் இதுபோன்ற சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
மீண்டும் இதுபோன்ற சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் 2031ஆம் ஆண்டு மே மாதம் காணாலம். இந்தாண்டின் கங்கண சூரியகிரகணம் சவூதி அரேபியாவில் தொடங்கி கத்தார், ஐக்கிய அரபு அமீரககம், தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, சுமத்ரா, மலேசியா, மாலத்தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தெரியும்.