பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும், அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அயோத்தி தீர்ப்பு குறித்து மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், "ராமன் தன் மனைவியை நெருப்பில் இறங்கச் சொன்னான். அந்த நம்பிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா? தமிழ்நாடு எப்போதும் இந்தியாவுக்கு முற்போக்கு திசையைத்தான் காட்டி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்தப் போராட்டம் ஒரு முக்கியமான போராட்டம். இங்கு இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் பெருந்திரளாக திரண்டிருக்கிறோம் என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ராமன் பிறந்தானா? இல்லையா? என்று என் அம்மாவிடம் கேட்டேன். பிரசவம் பார்ப்பது அம்மா வீட்டில்தான் நடக்கும். நீ பிறந்தது என் அம்மா வீட்டில்தான் என்று கூறினார். அந்த வகையில் ராமனுக்கும் அவனது அம்மாவுடைய அம்மா வீட்டில்தான் பிரசவம் நடந்திருக்கும். ராமனுடைய அம்மா கோசலை என்றால், கோசலை நாட்டில்தான் ராமன் பிறந்திருக்க முடியும். அயோத்தியில் பிறந்திருக்க முடியாது என்ற உண்மை இந்த அரசுக்கு தெரியாதா?
நீ புராணத்திலிருந்து உண்மையென்று எடுத்துவைத்து விவாதிக்க ஆரம்பித்தால், நாங்கள் இன்னும் அறிவுப்பூர்வமாக கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. அப்படியென்றால் கோசலை நாடு எங்கிருக்கிறதென்று தேடி கண்டறிவதற்கான பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும் இந்துத்துவ சக்திகளுக்கும் தான் இருக்கிறது.
இங்கிருக்கும் இந்துக்களுக்கு ஒட்டுமொத்த பிரதிநிதி பாஜக-வினர்தானா? சிதம்பரம் கோயிலின் தீட்சிதர் இந்துவா? அல்லது அடி வாங்கிய அந்த பெண்மணி இந்துவா? யாருடைய நீதி இங்கு நின்றிருக்கிறது. யாருடைய நம்பிக்கையை இந்த நீதிமன்றம் உயர்த்தி பிடிக்கிறது என்கிற கேள்வி முக்கியமானது.
இந்தத் தேசம் என்பது இந்துக்களின் தேசமென்றும், பாஜகதான் அதற்கு பிரதிநிதியென்றும் நம்மீது ஒரு நம்பிக்கையை திணிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வார்களா? இதில் உயர் சாதிகளின் நம்பிக்கையை மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் இந்துக்களின் நன்மை. அந்த இந்துக்களின் நம்பிக்கைதான் இந்த நாட்டின் நன்மை என்று சொன்னால் இந்த நாடே அநீதியாக இருக்கிறது என்பதைதான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் வழியாக நாம் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாடு இதை எதிர்த்து கேள்வி கேட்கிறதென்றால், தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை நீடிக்கக் கூடிய ஒரு பாரம்பரியம். அதில் நாம் அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு திசையை காட்டுவோம். எது முற்போக்கு என்பதை இவர்கள் முகத்தில் அரைந்து கூறுவோம்" என்று மிகக் கடுமையாக சாடி பேசினார்.