இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபிகள் நாயகத்தின் வழியில் ஐவகை கடமைகளுள் ஒன்றான “நோன்பிருத்தலை” ஒரு திங்கள் முழுவதும் கடைபிடித்து, இறுதியாக ஈகைப் பெருநாள் காணும் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நபிகள் நாயகத்தின் சிந்தனைகள் யாவும் மனிதநேயத்தை முன்னிறுத்துவதேயாகும். குறிப்பாக, மனிதர்கள் யாவரும் தங்களுக்கிடையில் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்பதும் அதற்கு சகோதரத்துவத்தைச் செழுமைப்படுத்த வேண்டுமென்பதும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
ஆனால், இஸ்லாத்தின் பெயரால் உலகில் எங்கோ ஒருசிலர் செய்யும் மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும், இஸ்லாமியப் பெருங்குடி மக்களையும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு மேலோங்கியுள்ளது. இது சமூகநல்லிணக்கத்தின் மீது ஈடுபாடுள்ள அனைவருக்கும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு இங்கே கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், அத்தகைய ஆதாய அரசியல் செய்யும் சங்பரிவார் சக்திகள் மீண்டும் இந்திய ஆட்சிபீடத்தைக் கைப்பற்றியுள்ளது. இது ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, சனநாயகத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. ஐந்தாண்டு காலத்தில் நடந்த சனாதன பயங்கரவாத நடவடிக்கைகள் தற்போது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில், இந்திய மண்ணில் சமூகநல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்கவும், ஜனநாயகம், அதற்கான அரணாக விளங்கும் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் முற்போக்கு சக்திகள் அனைவரும் இந்த ரமலான் பெருநாளில் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.