சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று (நவ. 6) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் 1,000 பேருக்கு, இலவசமாக 'மனுஸ்மிருதி' புத்தகத்தை வழங்கினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லாமல் மனுஸ்மிருதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் 1 மணி வரை புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனுஸ்மிருதி என்பது வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனுஸ்மிருதி அடிப்படையில் தான் குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைப்பெற்று வருகிறது. பெண்கள் சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிரிதியின் வழிகாட்டுதல். ஆர்எஸ்எஸின் கொள்கை மனுஸ்மிருதி புத்தகத்தை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, ஆர்எஸ்எஸின் வழிகாட்டுதலை மக்களுக்கு வெளிக்கொண்டு வர இந்த புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சமூக நீதி சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் கூடாது என்பதுதான் மனுஸ்மிருதியின் கருத்து. அதனடிப்படை கொள்கையாக கொண்டுள்ள இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக. சென்னை உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தான், இன்று பயந்து ஓடிப்போய் இருக்கிறார்கள். மக்கள் இந்த புத்தகத்தைக் கேட்டு வாங்கி செல்கிறார்கள். அவர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இந்த புத்தகம் மக்கள் மத்தியில் சென்றடைகிறது.
இது சமூக நீதிக்கான மண் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்திலேயே நாங்கள் அதை எதிர்க்கிறோம். ஆர்எஸ்எஸ்ஸை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட்டால் தமிழ்நாடு மதவெறி களமாக மாறிவிடும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால், இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸுக்கு இடம் இருக்காது. வெளிப்படையாக மதவெறி, சாதிவெறி அரசியலை கட்டவிழ்த்து விடுகிறது. பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களின் கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்