மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மருது சகோதரர்களின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 7.5% சட்ட மசோதாவில் ஆராய்ச்சி செய்ய என்ன இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஓரவஞ்சனை.
சங் பரிவார்களின் ஏவுதலுக்கு ஏற்ப ஆளுநர் தமிழர் விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நான்கு வார காலத்தில் எந்த வழக்கறிஞர்களை வைத்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறார். கையெழுத்திடுவதற்கு ஒரு நிமிடம் போதும். ஆனால் அதை செய்ய ஆளுநருக்கு மனமில்லை. தமிழ்நாடு ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
திருமாவளவன் பெண்களை மதிப்பவர், உயர்வானவர், பண்பாடு நிறைந்தவர். திருமாவளவன் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு பதியப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறினார்.