சென்னை: பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில், 700 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வந்தனர். 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு, நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் நீர்நிலை ஆக்கிரம்பிப்பு குறித்த நடவடிக்கைகளை, எந்தவித சமரசமும் இல்லாமல் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம், அகற்றும் பணிகளை பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக, அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளது என்றும், நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை எவ்வித சமரசமும் இன்றி உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த அப்பகுதி மக்களை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் இன்று (நவ.12) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இந்தப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் இந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெறும் வரையில் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளியை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடிய மாநகராட்சி மேயர்.. தஞ்சையில் நெகிழ்ச்சி!