சென்னை: சரியாக 35ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தினத்தன்று வெளியான படம் தான் ஊமை விழிகள். கார்த்திக், சந்திரசேகர், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், சரிதா, ரவிச்சந்திரன், இளவரசி, ஸ்ரீவித்யா, சசிகலா, விசு, கிஷ்மு, செந்தில், மலேஷியா வாசுதேவன் ஆகியோரின் கூட்டணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை தயாரித்து, இயக்கியது எல்லாமே திரைப்பட கல்லூரி மாணவர்கள் தான்.
அப்போது, திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் மதிக்கக்கூட மாட்டார்கள். ஏளன பேச்சுக்கள் ஏராளமாக வந்துவிழும். ஆனால், அத்தனையும் இந்த ஒரு படத்தின் மூலம் தலைகீழாக மாறியது. மேலும், இப்படம் சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்குப் பெருமை சேர்த்தது.
ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான சஸ்பென்ஸ் த்ரில்லரை ஒரு தமிழ் திரைப்படத்தில் பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்தனர். ரவிச்சந்திரனின் வில்லத்தனம் மிரள வைத்தது மட்டுமல்லாமல் சினிமாவில் அவருக்கான ரீஎண்ட்ரியாகவும் அமைந்தது.
ஒரு ரிசார்டுக்கு வரும் இளம் பெண்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் காணாமல் போகிறார்கள். இதனை விசாரிக்க வரும் பத்திரிக்கையாளர் சந்திரசேகர் கொல்லப்படுகிறார். இதனையறிந்த பத்திரிக்கை உரிமையாளர் ஜெய்சங்கர், காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகாந்த், பத்திரிகையாளர் அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து கொலையாளியை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை.
இக்கதையை ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு திக் திக் திரைக்கதை மூலம் மாணவர்கள் அசத்தியிருப்பார்கள். இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது மட்டுமின்றி, டிரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் மனோஜ் கியான், ஆபாவாணனின் பின்னணி இசையும், பாடல்களும் தான்.
மாமரத்து பூ எடுத்து, ராத்திரி நேரத்து பூஜையில், தோல்வி நிலையென நினைத்தால் போன்ற பாடல்கள் இப்போதுவரை ரசிகர்கள் கேட்கும் பாடலாக இருந்து வருகிறது.
இப்படத்தில் வரும் ஒரு கிழவி கதாபாத்திரத்தை பார்க்கும்போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் மனதில் திக் திக் என்றிருக்கும். இப்படம் குறித்த தனது அனுபவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஜீவா.
அதில், “ ‘ஊமை விழிகள்’ வெளியாகி 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்த ஆபாவாணன் குழுவினர் இந்த திரைப்படத்தை நீண்ட நாள்களாக எடுத்துக்கொண்டிருந்தனர். அவருடைய டிப்ளோமா படத்தை விரிவாக்கி இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது.
அதே சமயத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கண்மணி பூங்கா, சிதம்பர ரகசியம் போன்ற படங்களுக்கு விநியோக உரிமையும் வாங்கி இங்கு திரையிட்டுக்கொண்டிருந்தார் ஆபாவாணன். நாங்கள் அவற்றுக்கு பேனர்கள் வரைந்துகொண்டிருந்ததால் சந்திப்பின்போதெல்லாம் அவர் நண்பர்கள் யாவரும் ‘ஊமை விழிகள்’ படப்பிடிப்பை பற்றி கதை கதையாக சொல்வார்கள்.
பூனே திரைப்படக் கல்லூரியும், அடையாறு கல்லூரியும் யதார்த்த திரைப்படங்களை ஆதரித்து வந்த காலம். சென்னையிலிருந்து ‘தாகம்’, ‘அவள் அப்படித்தான்’ போன்ற கலைப் படங்கள்தான் வந்துகொண்டிருந்தன.
அந்த சமயத்தில் தான் ‘ஊமை விழிகள்’ திரைப்படம் வெளிவந்தது. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் மேல் இருந்த பார்வை ஒரே நாளில் மாறிவிட்டது.
சினிமாஸ்கோப் என்றால் தோல்வி என்ற மூட நம்பிக்கையை உடைத்தது. யூனிட் அப்படியே புதுமுகங்கள். நடிகர்கள் அனைவரும் அப்போதைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள். இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் முதல் படம். அரவிந்தராஜ், ரமேஷ்குமார், ஜெயச்சந்திரன், மனோஜ் ஞான் இருந்தபோதிலும் ஆபாவாணன் ஒரு கேப்டனை போல, ஆனால் முகம் காட்டாமல் மறைந்து சாதனை புரிந்தார்.
கதை, வசனம், பாடல்கள், பாடகர், இசை மேற்பார்வை என்று பல அவதாரங்கள் எடுத்தார். இளம் விஜயகாந்தை சற்று முதியவராக காட்டி ஒரு த்ரில்லரை எடுக்க பயங்கர தைரியம் தான். கார்த்திக், சந்திரசேகர், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், சரிதா, ரவிச்சந்திரன், இளவரசி, ஸ்ரீவித்யா, சசிகலா, விசு, கிஷ்மு, செந்தில், மலேஷியா வாசுதேவன் என்று நட்சத்திர பட்டாளம்.
ஒளிப்பதிவை பற்றி பேசாத ஆள்களே இல்லை. இரவில் வெள்ளை அம்பாஸடர் கார்கள் ஹெட் லைட் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வரும் காட்சியில் கை தட்டாத ரசிகர்களே இல்லை. பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட். அதிலும் ஓய்விலிருந்த பி.பி. ஸ்ரீநிவாஸை கொண்டு வந்து, ஜெய்சங்கர் நடிக்க 'தோல்வி நிலையென நினைத்தால்' என்ற பாடலை பாடவைத்து அதையும் சூப்பர் ஹிட் ஆக்கிக்காட்டினார்.
இந்த திரைப்படத்திற்கு பெரும் ஆர்வத்துடன் பேனர்கள் வரைந்தேன். பின்னொரு நாளில் ஒரு திருமணத்தில் ஆபாவாணனுடன் உரையாடி மகிழ்ந்தேன். ஊமை விழிகளின் வெற்றி, திரைப்படக் கல்லூரியையே மாற்றிவிட்டது. அதில் சேர்வதற்கு பெரும் போட்டியும், திரையுலகில் இந்த கல்லூரி பட்டதாரிகளுக்கு ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியது.
படத்தின் முடிவில் ‘A film by Film Students’ என போடப்பட்ட வாக்கியம் பெருமைக்குரிய ஒரு சொற்றொடர் ஆனது” என பதிவிட்டுள்ளார்.
இப்போதும் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பினாலும் திரையைவிட்டு கண் இமை அகலாமல் படம் பார்க்கும் கூட்டம் உண்டு. இன்னும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் அழியவே அழியாது.
இதையும் படிங்க: மகேந்திரன் - மௌனத்தை மொழியாக்கியவர்