சென்னை: அடையாறு கஸ்தூரி பாய் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 3ஆவது தளத்தில் வசித்து வருபவர் கார்த்திக் நரேன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவரது பெற்றோர் இரண்டாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் புனித யாத்திரையாகக் காசிக்குச் சென்றிருந்த இவரது பெற்றோர், கடந்த 9 ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பியுள்ளனர்.
பெற்றோர் வருவதால் கார்த்திக் நரேன் அவர்கள் தங்கியிருந்த வீட்டைத் திறந்து வைத்து விட்டு மேல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு ஒருமணி அளவில் நரேனின் தந்தை ரங்கநாத் மற்றும் தாய் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது படுக்கை அறையில் மர்மநபர் ஒருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை எழுப்பி யார் என்று கேட்ட போது குடிபோதையில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கிக் கொண்டார்.
உடனடியாக நரேன் இது குறித்துக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்ததன் பேரில் அடையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதுங்கி இருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து பீரோவிலிருந்து திருடி பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பணம் 41ஆயிரம் மற்றும் 20 யூரோ கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த இளைஞரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், கஷ்த்தம் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (27) என்பதும், தற்போது சென்னையில் வில்லிவாக்கம், ஜிகேஎம் காலனி, முத்து மாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி அடையாற்றில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பில் கட்டுமான வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் சம்பவத்தன்று வீடு திறந்து கிடந்ததால் உள்ளே நுழைந்து திருடி விட்டு அங்கு வைத்திருந்த உணவு மற்றும் பிரிட்ஜில் வைத்திருந்த வெளி நாட்டு சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிட்டு போதை தலைக்கேறி அங்கேயே படுத்துத் தூங்கியது தெரியவந்தது. பின்னர் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் ரூ.82.8 லட்சம் கடன் மோசடி - 4 ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் கைது