சென்னை: அண்ணா நகர் பிரிவெரி காலனி பகுதியில் அமைந்தகரை காவல் ஆய்வாளர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பொதுமக்கள் ஒன்றுக்கூடி திருடன், திருடன் என கத்தியவாறு ஒருவரை விரட்டியுள்ளனர். அதனை கண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இரவு காற்று வாங்குவதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் அந்த திருடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மக்கள் கூடி திருடனை விரட்டியுள்ளனர். இதனால் திருடன் மாடி விட்டு மாடி தாவி தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீடுபுகுந்து திருட வந்து, இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற திருடனை போலீசார் தேடினர். அப்போது மொட்டை மாடியில் பதுங்கி இருந்த திருடனை அமைந்தகரை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் முகப்பேரை சேர்ந்த சுப்பிரமணி(26), என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசார் ஃபேஸ் டிடேக்ஷன் கருவி மூலமாக சோதனை செய்த போது, அந்த நபர் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் திருடன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது கொரட்டூர், திருமங்கலம் போன்ற காவல்நிலையங்களில் 7 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை உடனடியாக அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சுப்பிரமணியின் போதையை தெளிய வைத்து விசாரித்த போது ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து திருட சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும், ஏற்பட்ட சபலத்தில் சில்மிசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: புதிய இலாகாவில் பொறுப்பேற்க இருந்த நாளில் ஐஏஎஸ் தரவரிசை அதிகாரி உயிரிழப்பு!